range rover pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உற்பத்தியாக இருக்கும் ரேஞ்ச் ரோவர்.. ரூ.9000 கோடி முதலீடு செய்துள்ள டாடா நிறுவனம்!

சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

Angeshwar G

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில், சொகுசு காரான ஜாக்குவார் லேண்ட் ரோவர் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வேலுருக்கு அருகே ராணிப்பேட்டையில் ஆலை அமையும் பட்சத்தில், தென்னிந்தியாவில் டாடா மோட்டார்ஸின் இரண்டாவது உற்பத்தில் தளமாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலீடு குறித்து மார்ச் மாதத்திலேயே அறிவித்திருந்தது. சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வாகன உற்பத்தித் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டது.

தொழிற்சாலை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம் 13 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்டது. ஆனபோதும் உற்பத்தி செய்யப்படும் மாடல் குறித்தான அறிவிப்புகளை டாடா நிறுவனம் வெளியிடாமல் இருந்தது.

தற்போது அத்தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாக்குவார் லேண்ட்ரோவர் காரை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே Range Rover Evoque, Discovery Sport, Jaguar F-Pace போன்ற கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவைகள் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களாகவோ அல்லது புனே அருகில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார்களாவோ இருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே இத்தகைய கார்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் சொகுசுக் கார்களில் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ரக கார்களே அதிகளவில் விற்பனை ஆனாலும், ரேஞ்ச் ரோவர் கார்களின் விற்பனையும் சற்றே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.