தமிழ்நாடு

அம்மா உணவகங்களுக்கு அனுமதி; டாஸ்மாக் கடைகளுக்கு தடை

அம்மா உணவகங்களுக்கு அனுமதி; டாஸ்மாக் கடைகளுக்கு தடை

JustinDurai

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக (ecommerce) நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.