தமிழ்நாடு

இராஜராஜ சோழன் 1036-வது சதய விழா: தஞ்சையில் அரசு சார்பில் மரியாதை

இராஜராஜ சோழன் 1036-வது சதய விழா: தஞ்சையில் அரசு சார்பில் மரியாதை

kaleelrahman

மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் ஆண்டுதோறும் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1036 வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. ஓதுவார்கள் திருமுறை பாடி மங்கல வாத்தியங்களுடன் திருமுறை வீதி உலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட மாலையை மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தஞ்சை ராஜ வீதிகள் வழியாக திருமுறை வீதி உலா யானைமீது நடைபெற்றது. வீதி உலாவை தொடர்ந்து பெருவுடையாருக்கு நாற்பத்தி எட்டு வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.

இதையடுத்து பல்வேறு கட்சியினர் அமைப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படும் சதய விழா இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது. சதய விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.