தமிழ்நாடு

தமிழில் ஒலித்த மந்திரம்.. வட்டமிட்ட கருடன்... தஞ்சை கோயில் குடமுழுக்கு கோலாகலம்

தமிழில் ஒலித்த மந்திரம்.. வட்டமிட்ட கருடன்... தஞ்சை கோயில் குடமுழுக்கு கோலாகலம்

Rasus

தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர்.

இந்தியாவின் 29 பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. இக்கோயிலில் 8-ஆவது கால யாக பூஜையுடன் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது. காலை 4.30 மணியளவில் இந்த விழா தொடங்கியது. இதனையடுத்து காலை 7 மணியளவில் பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றது. காலை 7.25 மணியளவில் திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், கோபுரத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன. கலசத்தில் புனித நீர் ஊற்றப்படும்போது, கோயிலை சுற்றியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என உரக்க குரலெழுப்பி பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். முன்னதாக கோபுரத்தின் கலசத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதோடு, தீர்த்த நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கின்போது கோபுரத்தின் மேலே கருடன் வட்டமிட்டது. இதனை பார்த்த பக்தர்கள், கருடனையும் சேர்த்து வழிபட்டனர்.

ராஜகோபுரத்தை தொடர்ந்து விநாயகர், முருகன், பெரிய நாயகி, அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்து. குடமுழுக்கைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலில் மூலவர்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கையொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. மக்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக் கலை பெருமையை உலகுக்கு கூறும் தஞ்சை கோயில், குடமுழுக்கையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலித்தது.