செய்தியாளர்: ந.காதர்உசேன்
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039 ஆம் ஆண்டு சதய விழா அரசு விழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது நேற்று தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறை பாடியும் செண்டை மேளம், கொம்பு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கோவில் வளாகத்தில் இருந்து யானை மீது திருமுறை வீதி உலா தொடங்கி தஞ்சை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
இதையடுத்து இன்று மாலை ராஜராஜனின் பெருமையை போற்றும் வகையில் 1039 நடன கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு சோழன் சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில், நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.