’’கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே பொருட்களை திருப்பித்தாருங்கள்... இல்லாவிட்டால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கள்ளக்குறிச்சியில் தண்டோரா போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக மாணவியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து மற்றும் அலுவலகத்திற்கு தீவைத்தனர். இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. வன்முறை தீவிரமடைந்த நிலையில் பள்ளியிலிருந்து டேபிள், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போராட்டக்காரர்கள் தூக்கிச்சென்ற காட்சிகள் இணையங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் எ.வ வேலு உள்ளிட்டோர் பள்ளியை நேரில் ஆய்வுசெய்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சக்தி பள்ளியிலிருந்து திருடிச்சென்ற பொருட்களை விரைந்து திருப்பித் பள்ளியிலேயே கொண்டு போட்டுவிடுமாறும், இல்லாவிட்டால் போலீசாரால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் தண்டோரா போடப்பட்டுள்ளது.