ஆர்.என்.ரவி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு | மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ஒரு வரி விடப்பட்டது சர்ச்சையான நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுக்கொள்ளது.

Prakash J

'டிடி தமிழ்' சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, தமிழ்த்தாயின் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ’தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழக ஆளுநர் மாளிகை இதுதொடர்பாக விளக்கம் அளித்திருந்தது. “தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு

இவ்விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சியும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சி, “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன்விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இதுதொடர்பாக, மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஊடகங்களிலும் பேசுபொருளானது. அந்த வகையில், நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட என்ற சொல் தவிர்க்கப்பட்டதன் பின்னணி குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர்| ”முடிவுக்கு வர ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும்” - பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தல்!