தக்காளி  கோப்பு படம்
தமிழ்நாடு

உச்சத்தை தொட்ட தக்காளி விலை... கிலோ ரூ. 200க்கு விற்பனை! வியாபாரிகளும் வேதனை!

தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200 க்கு விற்கப்படுகிறது.

PT WEB

தக்காளி விலை தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் உயர்வில் உள்ளது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று வரை கிலோ 120 என இருந்த நிலையில் இன்று திடீரென 80 ரூபாய் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனால் தாங்கள் எளிதில் தக்காளி வாங்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, “30 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ஒன்றின் விலை ரூ. 6 ஆயிரத்தை தாண்டுகிறது. இதன் காரணமாக நாங்களே மிகவும் சிரமத்தில் தான் தக்காளி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

தக்காளி

ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி இறக்குமதி குறைந்ததே விலை உயர காரணமாக உள்ளது. ஒரு பக்கம் நம் மாநிலத்தில் தக்காளி உற்பத்தி குறைவு, இன்னொரு பக்கம் வெளிமாநிலத்திலிருந்து வரும் தக்காளி இறக்குமதியும் குறைவு. இதனால் இன்று தக்காளியின் விலை அதிகபட்சமாக கிலோ 200 என அதிகரித்துள்ளது. வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் தான் இருக்கிறோம். அதனாலேயே மக்களுக்கு, இந்த விலைக்கு தக்காளியை வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என தெரிவித்தனர்.