கேரளாவில் பெய்து வரும் கனமழை பாதிப்பால் பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வரும் நிலையில் இன்று உதகையில்இருந்து உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது…
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்குபெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க உதகை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்களை திரட்டி அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்றவை வழங்கப்பட்டது.
இதனையடுத்து உதகை மார்க்கெட் பகுதியில் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இன்று கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைஉதகை நகராட்சி ஆணையாளர் ரவி துவக்கி வைத்தார்.