annamalai, r.s.bharathi file image
தமிழ்நாடு

”சொன்னது ஊழல் பட்டியல்; வெளியிட்டதோ சொத்து பட்டியல்” - அண்ணாமலையின் ரிலீஸும் திமுகவின் ரியாக்‌ஷணும்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பட்டியல் குறித்து, அவரை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் இனி, அவர் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல நேரிடும்” எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாகவே, பாஜக - திமுக மோதல் நீடித்து வருகிறது. திமுக மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஊழல் புகார்களை வைத்து வருகிறார். அதற்கு பதில் சொல்லும் வகையில் திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அண்ணாமலை

இந்த நிலையில், ”ஏப்ரல் 14ஆம் தேதி (இன்று) திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” என ஏற்கெனவே அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, திமுகவின் அமைச்சர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் சொத்து பட்டியலை அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோவின்படி, திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விவகாரங்கள் குறித்து திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அண்ணாமலை திமுக குறித்து ஓர் ஊழல் குற்றச்சாட்டையும் வெளியிடவில்லை. யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ, அவர்கள் எல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரிடும். எம்ஜிஆர் ஊழல் பட்டியலை வெளியிட்டபோது பார்த்தேன், படித்தேன், சிரித்தேன் என்றார் கருணாநிதி. 6 முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம்; எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா?

ஆர்.எஸ்.பாரதி

திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை ஆளுமைமிக்கவர் கிடையாது. திமுக ஒரு திறந்த புத்தகம். எதை பற்றியும் கவலையில்ல; எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை.

அண்ணாமலை பட்டியலில் வெளியிட்ட அனைவரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள்” என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

ஊழல் விதி மீறல்கள் உள்ளதென்றால் மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்று ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ”அண்ணாமலை தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். விதிமீறல்கள் இருக்கிறது என்றால் எல்லா துறைகளும் மத்திய அரசான அவர்களிடம் தான் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். சட்டத்துறை அமைச்சர் சொன்னது போல் மடியில் கணம் இல்லை வழியில் பயமில்லை” என்றார்.

பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “இதுபோன்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. அண்ணாமலை வெளியிடுவதாகச் சொன்னது திமுகவினரின் ஊழல் பட்டியல். ஆனால், அவர் வெளியிட்டது, அவர்களுடைய சொத்துப் பட்டியலை. இந்த சொத்துப் பட்டியல் என்பது கிட்டத்தட்ட 30 ஆண்டுக்காலமாக உள்ளது. அவர் வெளியிட்டிருக்கும் கல்லூரிகள் எல்லாம் 1999, 2004 ஆகிய காலகட்டங்களில், அதாவது பாஜக - திமுக கூட்டணியின்போதே இருந்தது. ஆகையால், இந்த விசயத்தில் அண்ணாமலை ஒரு பரபரப்பு அரசியலை உருவாக்க நினைக்கிறார்.

டெல்லி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என் வழியில்தான் அரசியல் செய்வேன் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஷ்யாம், பத்திரிகையாளர்

தனது பெயர் கிராம்தோறும் எதிரொலிக்க வேண்டும் என அவர் எண்ணுகிறார். இதை, திமுக வலிமையாகவே எதிர்கொள்ளும். ஆர்.எஸ்.பாரதி சொல்வதுபோல் திமுகவினர், அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பர். இதை அண்ணாமலை, தன் அரசியல் வாழ்க்கைக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்வார். இதில் கவலைப்பட வேண்டியது அதிமுக என்பதுதான் என் கருத்து.

இதை பிரதான எதிர்க்கட்சியாக செய்ய வேண்டியது அதிமுகதான். அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொல்கிறார். டெல்லி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என் வழியில்தான் அரசியல் செய்வேன் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியல் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறியுள்ளார்.