சிறப்பு பேருந்துகள் pt desk
தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை | சென்னையில் எங்கிருந்து எல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? - முழு தகவல்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வருகிற 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

PT WEB

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வருகிற 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்களது சொந்த ஊர்களுக்குப் போகும் பொழுது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்து

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்.31 ஆம் தேதி (வியாழக்கிழமை ) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது.

ஆகவே வெளியூரிலிருந்து சென்னை வந்து தங்கி வேலை செய்பவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் தீபாவளியுடன் கூடிய இந்த 4 நாட்களை தங்களது சொந்த ஊரில் செலவழிக்க விருப்பப்படுவர்.

இவர்களின் விருப்பத்தை முன்னிட்டும் , தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள், மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி, போக்குவரத்துத் துறை ஆணையர், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மேலும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேசும்பொழுது,

”தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன். 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதே போல்... தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, நவம்பர் 2 முதல் நவம்பர் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகள் என்று மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் இயக்கப்படும்.

ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து, பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது‌. இந்தாண்டு, மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி, 1. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கம், திருச்சி மார்க்கம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் , வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கங்கள் வழியாக, இத்தடங்களில் பேருந்து இயக்கப்படும்

2. கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை மார்க்கம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மார்க்கம், திருத்தணி மார்க்கம் வழியாக பேருந்து இயக்கப்படும்

3. மாதவரம் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கம் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை வழியாக பேருந்துகள் செல்லும்.

மேலும், கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மையங்கள்

வருகிற 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்து

அதே போல், நவ.2, 3, 4 ஆகிய தேதிகளில் பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வருவதற்கு, சாதாரண நாட்களில் இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 3,165 சிறப்பு பேருந்துகளுடன், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3,405 பேருந்துகள் எனமொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கட்டுப்பாட்டு அறை :-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் பயனாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

சிறப்பு பேருந்துகள்

இணைப்புப் பேருந்துகள் :-

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 2 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்காக சுமார் 5.83 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கணித்துள்ளனர். அதேபோல் வரும் 24 ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அதேபோல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க சுங்கச்சாவடியில் தனியாக வழி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.