சென்னை வந்த சீனப் பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததால், அங்கிருந்து நேராக அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களை அவரை பரிசோதனை செய்தபோது சாதாரண காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முடிவில் கொரோனா அறிகுறி ஏதும் இல்லாததால் அவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தொற்றுநோய் தடுப்பு விரைவுக் குழுக்கள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 044 - 29510400, 044 - 20510500 ஆகிய தொலைபேசி எண்ணிலும், 94443 40496, 87544 48477 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 104 சேவை மையத்திலும் தொடர்பு கொள்ளலாம்.