மருத்துவர் பாலாஜி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

"மருத்துவமனைகளில் ஏன் இந்த பாதுகாப்பற்ற நிலை"-மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, “இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அதேநேரத்தில், இச்சம்பவத்தை ஒட்டி அரசுக்குப் பலர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாததை காட்டுகிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோபமடையும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருவதை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. நிர்வாகத் திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறது. தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், இது போலி திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. வெற்று வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகத்திலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கியது கண்டனத்திற்குரியது. மேலும், மருத்துவரைத் தாக்கிய அந்த இளைஞருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைத் தரவேண்டும். சட்டம் - ஒழுங்கு இன்றைக்குச் சீர்குலைந்து கேள்விக்குறியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், “தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்று காலை சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்தி குத்து, தீவிர சிகிச்சை என்ற செய்தி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற, அச்சுறுத்தும் செய்தியாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதற்கு விசாரணை தேவை. மேலும் அரசு மருத்துவமனைகளில் ஏன் இந்த பாதுகாப்பற்ற நிலை. சமீபகாலமாக குடிப்பழக்கத்திற்கும், போதைப்பொருளுக்கும் அடிமையாகி முறையற்ற செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

அதன் அடிப்படையிலே முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் அதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஏற்கெனவே பலமுறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின்போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “சென்னை, கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது. மருத்துவர்களுக்கும், மருத்துவமனையில் வேலை செய்வர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்களிடம் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.

மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் இருக்க, மருத்துவமனைகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.