தமிழ்நாடு

உலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு

உலக சாதனைக்கு தயாராகும் விராலிமலை ஜல்லிக்கட்டு

webteam

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்டமரத்தம்மான் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற போட்டியில் ஆயிரத்து 805 காளைகள் பங்கு பெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டு அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 2000 காளைகளை பங்கு பெற செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த உலக சாதனைக்கான அமைப்பினர் விராலிமலை வர உள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

அதுபோல ஈரோட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடத்தினை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் வருகிற 19ம் தேதி முதன்முறையாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், எஸ்.பி சக்தி கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியார்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் 19ம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 8.30மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கும் என்றார். மேலும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.