திமுக தொழிற்சங்கமான தொமுச தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், எம்பி. கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'கடந்த 10 ஆண்டுகளாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கியது மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவினர், தங்களது அரசியல் நோக்கத்திற்காகவே எதையும் செய்கின்றனர். மக்கள் நலனுக்காக செய்வதில்லை. குட்கா வியாபாரி வீட்டில் நடைபெற்ற ரெய்டின் போது 140 கோடி ரூபாயும் ஒரு டைரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு 40 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் அவரவர்களே குடித்துவிட்டு சாவது. இது அரசால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்ல. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே ரூ.25 ஆயிரம் நிதி கொடுத்துள்ளார். எனவே கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வழக்கம் அப்போது இருந்து இப்போது வரை நடப்பது தான்', என்றார்.