தமிழ்நாடு

அரைசதம் அடித்த தமிழ்நாடு பெயர்

அரைசதம் அடித்த தமிழ்நாடு பெயர்

webteam

சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 50வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை பொன்விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆந்திர மாநிலமும் இருந்தது. இதன்பின் தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து 1953 அக்டோபர் 1ஆம் தேதி ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.  சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் தொடர்ந்து அவரது உடல்நிலைமோசமடைந்து அக்டோபர் 13, 1956ல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரி போராட்டம் செய்தனர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில்  சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் அண்ணா தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் 1967ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது. 

சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு 50வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை பொன்விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.