தமிழ்நாடு

மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி தமிழகத்திற்குதான் மிகக் குறைவு

மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதி தமிழகத்திற்குதான் மிகக் குறைவு

Rasus

தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட வறட்சி நிவாரண நிதியில் சுமார் 4 சதவிகித நிதியை மட்டுமே வழங்கியிருப்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

2015-16 முதல் 2017-18-ஆம் ஆண்டு வரை வறட்சி நிவாரண நிதியாக 39,565 கோடி ரூபாயை மத்திய அரசிடம் தமிழகம் கோரியிருந்த நிலை‌யில் 1,748 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது விவசாய அமைச்சக புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதா‌வது கோரப்பட்ட தொகையில் வெறும் 4% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. மற்ற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு குறைவாக இருந்த‌போதிலும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது அவை கூடுதல் சதவிகித தொகையை பெற்றுள்ளதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

21,648 கோடி ரூபாயை நிவாரண நிதியாகக் கேட்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு, 2,387 கோடியே 7 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. கர்நாடக மாநிலம் 13,261 கோடி ரூபாயை கோரிய நிலையில் அதற்கு 4,841 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா 11,645 கோடி ரூபாயை கோரிய நிலையில் 4,379 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியிருந்தது.

2015-16 முதல் 2017-18 வரை மாநிலங்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 605 கோடி ரூபாயை மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியாகக் கேட்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசு அதில் 23,190 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது.