கார் இறக்குமதி வழக்கில் அபராதத்தை தள்ளுபடி செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 சொகுசுக் காருக்கு ரூ. 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தியிருந்தார். எனினும், நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400 சதவீதம் அபராதம் விதித்து, அதாவது ரூ. 30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
மேலும், அதுவரை நடிகர் விஜயின் பி.எம்.டபிள்யூ சொகுசுக் கார் வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யவேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.