கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்திற்கான உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தினார்.
தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் கோழி வளர்ப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட விவசாயிகளும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணியாக உள்ளது. இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும். கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது. இதுகுறித்து தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.