இலங்கையில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன். அவரின் தந்தை வெற்றிவேல்(75) கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முருகன்.
இந்நிலையில் அவரது கோரிக்கை அரசின் சார்பாக நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் இடமில்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக முருகனின் தந்தை உயிரோடு இருக்கும்போது அவரிடம் கடைசியாக வீடியோ காலில் பேச கடந்த 25 ஆம் தேதி அன்று அனுமதி கேட்க்கப்பட்டு, அதுகுறித்து எந்த பதிலும் அரசு தராதது குறிப்பிடத்தக்கது.