தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தற்போது வரை ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்கிறது. இதுவரை அரசியல் ரீதியாக ஆளுநரை கையாண்டு வந்த தமிழக அரசு, தற்போது சட்டரீதியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு, குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது உள்ளிட்ட19 மசோதாக்கள் அரசால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சீனாவில் தொடர்ந்து காணாமல் போகும் அமைச்சர்கள், தலைமை அதிகாரிகள்.. பின்னணி இதுதான்!
குற்றச்சாட்டு 1
மிகவும் அவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது. தனது அதிகாரத்தையும் பொறுப்பையும் ஆளுநர் துஷ்பிரயேகம் செய்கிறார் என்பதாக மாறுகிறது.
குற்றச்சாட்டு 2
தமிழக மக்களின் உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார். ஆளுநரின் செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு 3
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஆளுநர் தடையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை உள்ளிட்டவற்றிற்கு உத்தரவிட மறுக்கிறார்.
குற்றச்சாட்டு 4
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையை முறையான விளக்கமின்றி நிராகரித்திருக்கிறார்.
குற்றச்சாட்டு 5
பேரறிவாளன் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் மெத்தன போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது.
இதையும் படிக்க: ’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியும் 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் காத்திருக்கின்றன. அவற்றில் 2020 ஆம்ஆண்டு ஜனவரி அனுப்பிய மசோதாவும் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2020 ஜனவரி 12, தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக திருத்த மசோதா 2012
2020 ஜனவரி 18, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா 1989
2022 ஏப்ரல் 10, தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனுக்கு எதிராக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் கோப்பு
2022 ஏப்ரல் 25, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
2022 ஏப்ரல் 28, சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
2022 ஏப்ரல் 28, சட்டப்பேரவையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் நேச்சரோபதி, ஹோமியோபதி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா
2022 மே 16, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மசோதா 1996ல் திருத்தத்திற்கான ஒப்புதல்
2022 மே 16, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 1987ல் திருத்தம் செய்யும் மசோதா
2022 மே 16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டம் 1971ல் திருத்தம் செய்யும் மசோதா
2022 செப்டம்பர் 12, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, B.V.ரமணா சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய கோப்புகள்
2022 அக்டோபர் 27, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்யும் மசோதா
நீண்டகாலமாக சிறையில் உள்ள 49 பேர் விடுதலை தொடர்பாக, அனுப்பப்பட்ட தமிழக அரசின் அரசாணை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது
தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள 12 மசோதாக்கள் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் இதில் 12 மசோதாக்கள் தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ள ஆளுநரை நீக்கிவிட்டு தமிழக முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற மசோதாவாகும். இந்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஏனென்றால் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது.
ஆனால் உயர்கல்வியின் தரம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பல்கலைக்கழகங்களில் வேந்தரான ஆளுநரை நீக்கிவிட்டு, தமிழக முதல்வரை நியமிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவேதான் ஆளுநர் இந்த 12 சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். 13வது மசோதா சித்தா பல்கலைக்கழகத்திற்கு தனி நுழைத்தேர்வு நடத்துவது என்பதாகும். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இதை ஏன் தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடவில்லை’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம் பேசிய கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.