தமிழ்நாடு

மேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு

rajakannan

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக நீராவரி நிகம் லிமிடெட் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரி ஆற்றில் தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை சில மாற்றங்களுடன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளதையும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத் துறை ஆணையரான மசூத் உசேன்தான் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.