தமிழ்நாடு

"கருத்துகளை கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும்" - அரசாணை 115 குறித்து தமிழக அரசு விளக்கம்

webteam

மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை 115க்கு அரசியல் கட்சிகள் மற்றும் அரசு பணியாளர்களிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும், பணியாளர் சங்கங்களின் கருத்தை கேட்ட பிறகே அரசு முடிவெடுக்கும் எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சரிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.

அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் அவர்கள், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.