mk stalin pt web
தமிழ்நாடு

“மிக்ஜாம் பாதிப்பு - தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி தேவை” - மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

மிக்ஜாம் புயல் பாதிப்பில் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி தேவை என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Angeshwar G

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் ஐந்தாயிரம் கோடி ரூபாயை நிவாரண உதவியாக கேட்டிருந்தது.

இதனை அடுத்து மத்தியக்குழுவினர் சென்னையில் வெள்ளபாதிப்புகள் தொடர்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 பேர் கொண்ட குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களையும் ஆய்வு செய்தது. முன்னதாக சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னையில் நடந்து முடிந்த ஆய்வின் முடிவில் பேசிய ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். 2015 வெள்ள காலத்தை விட தற்போது இயல்பு நிலை விரைவாக திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்திட, வெள்ள பாதிப்பிற்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7033 கோடி தேவை என்றும் நிரந்தர நிவாரணமாக ரூ. 12 659 கோடி தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

புயல் மழையால் பொதுக்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்திட, சேதமடைந்த மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.