தமிழ்நாடு

வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் - தமிழக அரசு எச்சரிக்கை

rajakannan

எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அறுவை சிகிச்சை இல்லாத, சுகப்பிரசவம் வீட்டிலேயே சாத்தியம் என்று கூறி கோவையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஹீலர் பாஸ்கர் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அதுதொடர்பான பரப்புரை வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. அண்மையில் யூட்யூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே கணவரும் நண்பரும் சேர்ந்து பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கோவை காவல் துறையினரால் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பிரசவம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர், கிராமச் சுகாதார செவிலியர் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடப்பதாகவும், அவற்றில் 70 சதவிகித பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்துள்ள தமிழக அரசு, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.