உலக முதலீட்டாளர் மாநாடு முகநூல்
தமிழ்நாடு

“உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”- உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

PT WEB

இன்று காலை 10 மணி அளவில் ‘உலக முதலீட்டாளர்’ மாநாட்டினை சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் துவங்கி வைத்துள்ளார். “2030-ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” என்பதே இம்மாநாட்டின் முக்கிய இலக்காக உள்ளது. இதற்கேற்ப சென்னையில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார்.

மூன்றாவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க முப்பதாயிரத்திற்கும் அதிக பிரதிநிதிகள் முன்பதிவு செய்துள்ளனர். 50-க்கும் அதிக நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதல்வர் தமிழில் பேசியவை அனைத்தும், அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் சமமான வளர்ச்சியை பெறும்வகையில் முதலீடுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது. மாநாட்டின் இறுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

கிருஷ்ணகிரியில் டாடா நிறுவனம் ரூ.12,082 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” என்று பேசினார்.