தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் தமிழக மீனவர்கள் - பாதுகாப்புப் பணியில் 150 போலீசார்

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் தமிழக மீனவர்கள் - பாதுகாப்புப் பணியில் 150 போலீசார்

Sinekadhara

கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழகத்தின் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகுகளில் 81 பேர் பயணம் மேற்கொண்டனர். அங்கு 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர். 

கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் திருவிழாவாக இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிலுவைப்பாதை நடைபெற்று பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை மீண்டும் சிலுவை பாதை நடத்தி சிறப்பு திருப்பலி நடத்திய பின்னர் கொடி இறக்கப்பட்டு கச்சத்தீவு திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 81 பக்தர்கள் மட்டுமே செல்கின்றனர்.

மேலும் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்களை முழுமையான சோதனை செய்வதற்காகவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதோடு இந்திய கடலோர காவல்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு போலீஸார், சுகாதாரத் துறை வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறையை பின்பற்றி செல்லவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.