தமிழ்நாடு

'தண்ணி இருந்தா வரோம்' திணறிப்போன தீயணைப்பு வீரர்கள்

'தண்ணி இருந்தா வரோம்' திணறிப்போன தீயணைப்பு வீரர்கள்

webteam

சென்னையில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை தீ ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியின் மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் கொடுத்தால் வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் அருகிலுள்ள சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தனர். 

அத்துடன் தீயையும் பஞ்சாயத்து பணியாளர்களே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தண்ணீரை வைத்து தீயை அனைத்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த பஞ்சாயத்து தலைவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், “நான் தீ பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தேன். அவர்கள் தீயை அணைக்க எங்களையே தண்ணீர் ஏற்பாடு செய்ய கூறினார்கள். எனினும் அவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் நாங்களே சித்தேரியிலிருந்து தண்ணீர் எடுத்து நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு தமிழ்நாடு தீயணைப்பு துறையின் அதிகாரி ஒருவர் , “எங்களுடைய அனைத்து வாகனங்களிலும் தேவையான தண்ணீர் உள்ளது. பெரியளவில் தீ சம்பவம் ஏற்பட்டால் நாங்கள் மெட்ரோவாட்டரிலிருந்து தண்ணீர் கேட்போம். அத்துடன் எங்களுடைய வாகனத்தில் அருகிலிருக்கும் ஏரி அல்லது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளது. இந்தச் சம்பவம் தகவல் பரிமாற்ற பிரச்னை காரணம் நடந்திருக்கலாம். ஏனென்றால் பீர்கன்கரனையில் இதேசமயத்தில் தீ ஏற்பட்டது. அந்த தீயணைக்க அதிக தீயணைப்பு துறை வாகனங்கள் ஈடுபட்டிருந்தன. இதனால் கட்டுப்பாட்டு அரையினர் தண்ணீர் தேவை என்று தவறாக தகவல் அளித்திருப்பார்கள் ” என்று தெரிவித்தார்.