தமிழ்நாடு

கடமை தவறாத தமிழக மருத்துவர்கள் : கருப்பு பட்டை அணிந்து மருத்துவ சேவை

webteam

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்குவங்கத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ அறிவித்தது.‌ மருத்துவர்‌கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கு எதிராக ‌எந்த வடிவில் வன்முறை நிகழ்ந்தாலும், அதை தடுத்து நிறுத்துவத‌ற்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கை‌ எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு விரிவான சட்டத்தை இயற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

இதனைதொடர்ந்து மேற்குவங்கத்தில் மருத்துவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, மருத்துவத் துறையில் அவசரம் காலமில்லாத சேவைகள் நிறுத்தப்படும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. அதே சமயம், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அவசரகால மருத்துவ சேவைகள் பாதிப்பு இல்லாமல் தொடரும் என்றும் ஐஎம்ஏ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பணிப்புறக்கணிப்பு செய்யாமல் சேவையில் தொடர்கின்றனர். சிலர் மட்டும் மருத்துவர் தாக்கப்பட்டதற்கான தங்களது எதிர்ப்புகளை தலையில் ஹெல்மெட் அணிந்து மருத்துவமனை வாயில் முன்பு நின்று குரல் எழுப்பினர்.