வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் 152 அடி முழுகொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 128 அடியை நெருங்குகிறது. கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து முதன்முறையாக 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு தற்போது 129.1 அடியாகவும், 118 அடி முழு கொள்ளளவு மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 104 அடியாகவும் இருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த அணைகளுக்கும் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணையில் தற்போது 37.8 அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 48 அடியாகும். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பெருஞ்சாணி அணையின் மொத்த கொள்ளளவான 77 அடியில் தற்போது 73.25 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் தற்போது 54 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. சோத்துப்பாறை அணையில் நீர் இருப்பு 99 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 126 அடியாகும்.