மு.க.ஸ்டாலின் பேச்சு PT
தமிழ்நாடு

“அமித்ஷாவிற்கு மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

PT WEB

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.

அப்போது பேசுகையில், “மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் தண்ணீர் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடப்பு ஆண்டில் குறுவை நெல் தொகுப்பு திட்டம் ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுவை நெல் சாகுபடி 5 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்தால் மட்டும் போதாது, திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறுவை நெல் தொகுப்பு திட்டத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் மானிய விலையில் வழங்கப்படும். பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி தேவையான இடுபொருட்களை ஈட்டு சாகுபடி செய்திடவும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் அதிமுக குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புவது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை. அம்மா உணவகம் மூடப்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை.

கடந்த ஆட்சியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் அந்த புத்தகப்பைகள் வீணாகக்கூடாது என்பதற்காக அதனை மாணவ மாணவிகளுக்கு வழங்கினோம்” என்றார்.

cm stalin

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர், “தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற கருத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அமித்ஷாவிற்கு மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை! தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் தமிழிசை மற்றும் எல் முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கிறது. ஊழல் குறித்து காங்கிரஸ் திமுக கூட்டணியை விமர்சிக்கும் பாஜக, ரஃபேல் ஊழல் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது என்பதை மறந்து விடக்கூடாது.

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை தேவைப்படவில்லை. மருத்துவமனையை அறிவித்தது பாஜக அரசு தான். எனவே இந்த விவகாரத்தில் திமுக பதிலளிக்க வேண்டும் என்று பொறுப்புள்ள அமைச்சர் கூறுவது அழகல்ல” என்று குறிப்பிட்டார்.