எங்களின் கடைசி காலத்திலாவது என் மகன் பேரரறிவாளன் எங்களுடன் இருக்க தமிழக முதல்வர் கருணை காட்ட வேண்டும். மீண்டும் என்மகன் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்வது முதல்வரிடம்தான் உள்ளது என்று அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அற்புதம் அம்மாள் வெளியிட்டுள்ள வீடியோவில் “30 ஆண்டுகளாக எனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறேன். அவனை கைது செய்தபோதே அவர் நிரபராதி என்று கூறினேன், ஆனாலும் அவர் 30 ஆண்டுகளாக சித்திரவதையை அனுபவித்து வருகிறார். தற்போது அவரின் வாக்குமூலத்தை பெற்ற தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகளே “ பேரரறிவாளனின் வாக்குமூலத்தை முறையாக பதிவுசெய்யவில்லை, அவ்வாறு செய்திருந்தால் அவர் விடுதலையாகியிருப்பார்” என தங்களின் தவறை ஒத்துக்கொண்டுள்ளனர். இதனால்தான் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா என்மகனை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல சென்றபோது, “உங்களுக்கு இனி கவலையே இல்லை, இனி உங்கள் மகனை விடுதலை செய்யவேண்டியது என் பொறுப்பு” என தெரிவித்தார். அதன்பின்னும் மத்திய அரசு பல தடைகளை உருவாக்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையும் எழுவர் விடுதலைக்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது, பேரரறிவாளனும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார், நானும் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தேன், மக்களும் பலவகைகளில் போராடினார்கள், ஆனாலும் ஆளுநர் இதுவரை முடிவு எடுக்கவில்லை.
தற்போது நீதிமன்றமும் ” எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்க தாமதம் ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளது, எழுவர் விடுதலைக்கு எந்த தடையுமில்லை எனவும் கூறியுள்ளது. எனது கணவர் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்ததால், தற்போது எனது மகன் பேரரறிவாளன் பரோலில் வெளிவந்துள்ளார். என் கணவரை கவனித்துக்கொள்ள என் மகன் எங்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது, எனது மகனின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது, அவரின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது, அவருக்கும் சிகிச்சை அளிக்கவேண்டும். அதனால் எங்களின் கடைசி காலத்திலாவது என் மகன் எங்கள் உடன் இருக்க தமிழக முதல்வர் கருணை காட்ட வேண்டும். மீண்டும் என்மகன் சிறைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்வது முதல்வரிடம்தான் உள்ளது, அவர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்