தமிழ்நாடு

துரைமுருகன் தொடங்கி நாசர் வரை... மூத்த அமைச்சர்களின் செயலால் கடும் அதிருப்தியில் முதல்வர்?

துரைமுருகன் தொடங்கி நாசர் வரை... மூத்த அமைச்சர்களின் செயலால் கடும் அதிருப்தியில் முதல்வர்?

webteam

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்து வருகிறது.

தொண்டரைத் தாக்கிய அமைச்சர் நேரு

நேற்று இரவு (ஜனவரி 26) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். அந்த இடத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தொண்டர் ஒருவர் உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரை, தலையில் அடித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியேற்றியதாகவும், அங்கிருந்த தொண்டர்களை வேகமாகச் செல்லும்படி அதட்டியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தொண்டர் மீது கல் எறிந்த அமைச்சர் நாசர்

திருவள்ளூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் பங்கேற்க இருந்த விழா மேடையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், பார்வையிடச் சென்றார். அப்போது அமைச்சர் நாசர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர், திமுகவினரைப் பார்த்து, ’போடா நாற்காலியை எடுத்து வா’ என்று சொல்லி கல்லை எடுத்து எறிந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி

இதுபோன்ற செயல்களால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தம் வருத்தத்தை பதிவுசெய்திருந்தார். இதுகுறித்து அவர், ”என் முகத்தைப் பார்த்தாலே தெரியும். கட்சியினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்கவிடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவதுபோல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? தூங்கி எழும்போது புதிதாக என்ன பிரச்சனையை கிளப்பி உள்ளனர் என்ற பயத்தோடே எழுவதாக புலம்பினார். மேலும், பொது மேடைகளில் பேசும்போது கவனித்து பேச வேண்டும் என்று தெரிவித்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர் திமுக அமைச்சர்கள். ஆனால், இது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதிர்வலையை உண்டாக்கிய அமைச்சரின் செயல்பாடுகள்

சமீபகாலமாக இதுபோன்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபமெடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதற்கு முன், பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத்தை ’ஓசி பயணம்’ என அமைச்சர் பொன்முடி பேசியிருந்ததும், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் தாக்கியதும் கடும் விமர்சனத்தை எழுப்பின.

அதுபோல், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனுஸ்ருதி குறித்த பேச்சும் அதிர்வலையை உண்டாக்கியது.

அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலரை, ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதும் திமுக அரசுக்கு தலைவலியைத் தந்தது. அதுபோல் மூத்த அமைச்சர் துரைமுருகன், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் குறித்துப் பேசியபோது, ’சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமைச்சர் நேரு, தனக்கு வேண்டிய டிஎஸ்பியை பார்த்து, ’அவரின் திறமை என்ன என்றால், ஒருவரை குற்றவாளியாக ஆக்க முடியும், குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க முடியும்’ என்று தெரிவித்ததும் பிரச்சினையை உண்டாக்கியது. அதே அமைச்சர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவையும் ஒருமையில் அழைத்ததாகச் செய்திகள் வெளியாகின. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ’ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை’ என்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.