உதயநிதி ஸ்டாலின் x page
தமிழ்நாடு

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்|6 அமைச்சர்களின் இலாகாகளும் அதிரடி மாற்றம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Prakash J

கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரங்களில் ஒன்று, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவி குறித்துதான். விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், தற்போது அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் வெளியான செய்திகள், மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றன.

இதற்கிடையே, திமுக இளைஞரணியின் 45ஆவது ஆண்டு தொடக்க விழாவிலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டுமென கோரிக்கை வலுவாக எழுந்தது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில்தான், திமுகவின் பவள விழா இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். இந்த பவள விழா முடிந்த சில நிமிடங்களில், திமுகவினருக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஹிஸ்புல்லா தலைவர் மரணம்... யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? இஸ்ரேலை வீழ்த்த தயாராகும் அடுத்த தலைவர்.. ?

மேலும் தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் கே.பொன்முடி, வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதுபோல் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலாண்மைத்துறைக்கும், வனத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் எம்.மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பால்வளத்துறைக்கும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு

இந்த நிலையில், செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை எந்த துறையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒருவேளை, நாளை அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மனோ தங்கராஜ், கே.எஸ்.மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: வங்கதேச ரசிகர்மீது தாக்குதல்?| ராபி இந்தியாவுக்கு வந்தது ஏன்? போலீஸ் விசாரணையில் முக்கியத் தகவல்!