தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அவ்வரசு இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் அமைச்சர்களின் துறைகள் மாற்றி வழங்கப்பட்டதே தவிர, அமைச்சர் எவரும் விடுவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்த பல்வேறு பேச்சுகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்குக்கூடப் பதிலளித்த மூத்த அமைச்சர் துரைமுருகன், ‘தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர் பதவியேற்பு விழா வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.