தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் தொடங்கியே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது தொடர்ந்து ஊழல் புகார்களை வைத்து வருகிறார். அதற்கு பதில் சொல்லும் வகையில் திமுகவினரும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ”திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவின் அமைச்சர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.
ஏப்ரல் 14 அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில், திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில், அதாவது 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காலகட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தம் நடந்தது. இதை பெறுவதற்கு ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக ரூ. 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்” என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், ”இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை அண்ணாமலை வழங்காவிட்டால், திமுக தலைவர்கள் அனைவரும் மாநில அளவில் அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்” என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் உண்மையில்லை என அவர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், “ ’திமுக ஃபைல்ஸ் 2’ தயாராக உள்ளது. அது, விரைவில் வெளியிடப்படும்” என சமீபத்தில் தெரிவித்திருந்தார் அண்ணாமலை. அதன்படி இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அண்ணாமலை, ’திமுக ஃபைல்ஸ் 2’ தொடர்பான ஆவணங்களை பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து ஆளுநரிடம் வழங்கினார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக தலைமை குடும்பம் உள்ளிட்டோரின் பினாமி சொத்துக்கள் மற்றும் 3 ஊழல்கள் என 5,600 கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ETL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிடெட் மூலம் 3000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது; போக்குவரத்துத் துறையில் 2000 கோடி ரூபாய் அளவுக்கும் TNMSCயில் 600 கோடி ரூபாய் அளவுக்கும் ஊழல் நடந்ததுள்ளது” என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் விவரங்களை எங்களது பாதயாத்திரையின்போது விளக்குவோம் என அவர் பதிவிட்டுள்ளார்.