தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை பத்து மணிக்கு பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. அவை கூடியதும், மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதன்பிறகு, பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்று அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, தேதிகள் இறுதி செய்யப்படும். மூன்று நாள்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்று பழனிசாமி சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வமும் கடிதம் கொடுத்திருந்தார்.
இந்த இரு கடிதங்களும் பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவராக அவர் யாரை அங்கீகரிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பேரவைத் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது குறித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடப்பு கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட மேலும் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.