ஆளுநர் ஆர்.என்.ரவி pt web
தமிழ்நாடு

‘தேசிய கீதம் இசைக்கப்படவில்லை’ தமிழக அரசின் உரையை புறக்கணித்தார் ஆளுநர்... மரபு சொல்வது என்ன?

தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

Angeshwar G

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் மலர்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களிலேயே நிறைவு செய்தார்.

“வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார் ஆளுநர்.

ஆர்.என்.ரவி

தேசிய கீதம் புறக்கணிப்பு:

இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், “சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போது தேசிய கீதம் படிக்கப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கப்பட்ட போது தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி, பேரவையில் இருந்து சில நிமிடங்களில் வெளியே சென்றார். இந்நிலையில் பேரவையின் மரபுப்படி உரையின் இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.

“பொதுவாகவே பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதுதான் வழக்கம்” என்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையும் - தொடரும் சர்ச்சைகளும்

சென்ற ஆண்டு நடந்த உரையின்போது சில சொற்களை ஆளுநர் தவிர்த்தது சர்ச்சையாகியிருந்தது. திராவிட மாடல், அண்ணா, கலைஞர், பெரியார் போன்ற வார்த்தைகளை கடந்தாண்டு ஆளுநர் படிக்கவில்லை.

கடந்தாண்டு ஆளுநரின் சர்ச்சைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதேபோல இந்த வருடமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர் உரையில் அவ்வபோது சர்ச்சைகள் இடம்பெறுவது வழக்கம். இந்தாண்டு கேரளாவில் ஆளுநர் தனது உரையை சில நிமிடங்களிலேயே முடித்தது சர்ச்சையானது.