தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் இளநிலை படிப்புகளில் சேர தற்போது வரை 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் உள்ள 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்படுகிறது. இந்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 18 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர தற்போது வரை 46,621 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து வருகிற 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்வோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அதன் பின்னர் தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.