தமிழ்நாடு

விரைவு செய்திகள்: குமரியில் தொடரும் கனமழை | புதுச்சேரியில் பாஜக பலம் | யாஸ் புயல்

விரைவு செய்திகள்: குமரியில் தொடரும் கனமழை | புதுச்சேரியில் பாஜக பலம் | யாஸ் புயல்

Sinekadhara
  1. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  2. பொங்கிப் பாயும் இயற்கை அழகு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், சிற்றாறிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
  3. 8 கோடி கிலோ கறிக்கோழி தேக்கம், ரூ.700 கோடி நஷ்டம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் 8 கோடி கிலோ கறிக்கோழிகள் தேக்கமாகியுள்ளது. இதனால் 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கோழிப் பண்ணையாளர்கள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.
  4. பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிடுக: சென்னையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்க மூன்று நாட்கள் வரை ஆவதால் விரைந்து வெளியிட வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  5. புதுச்சேரி - பாஜக எம்எல்ஏக்கள் பலம் 12 ஆக உயர்வு: புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 12ஆக அதிகரித்துள்ளது. துணை முதல்வர் பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமி மறுத்துவரும் நிலையில், பலத்தைக் காட்டி பாஜக வலியுறுத்தி வருகிறது.
  6. 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கினார் முதல்வர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சைக்காக 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னை மாநகராட்சிக்கு முதலமைச்சர் வழங்கினார்.
  7. பருப்பு கொள்முதல் டெண்டருக்கு இடைக்கால தடை: 20,000 மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதலுக்கான டெண்டருக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் டெண்டர் அறிவிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
  8. மேகதாது அணை திட்டம் அனுமதிக்கப்படாது: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக வழக்கறிர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
  9. கரையை கடந்த 'யாஸ்' புயலால் பலத்த சேதம்: ஒடிசாவின் வடக்குப்பகுதியில் அதி தீவிர யாஸ் புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை, அலைகளால் சீற்றம் ஏற்பட்டது.
  10. யாஸ் புயல் - ஒடிசா, மே.வங்கத்தில் கடும் பாதிப்பு: மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் ஒடிசாவில் மின்கம்பங்கள், மரங்கள், வேரோடு சாய்ந்தன. மேற்கு வங்க மாநிலத்திலும் மாவட்டங்கள் வெள்ளக்காடாயின.
  11. சூறைக்காற்றால் 10,000 வாழை மரங்கள் சேதம்: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. சேதத்திற்கு விரைந்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  12. போதைக்காக விபரீத முடிவு - ஒருவர் உயிரிழப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே போதைக்காக பெயின்ட்டில் கலக்கும் ரசாயனத்துடன் எலுமிச்சைச்சாறு கலந்து குடித்து விபரீத முயற்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தப்பியோடியதால் போலீஸார் அவரை தேடிவருகின்றனர்.