தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: 4.2 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகை | ராஜகோபாலனுக்கு போலீஸ் காவல்

விரைவுச் செய்திகள்: 4.2 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகை | ராஜகோபாலனுக்கு போலீஸ் காவல்

Sinekadhara

சென்னைக்கு மேலும் 4 லட்சத்து 20 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து வந்தன. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது தமிழக நிதியமைச்சர் புகார்: சரியான திட்டமிடல் இல்லாததே தடுப்பூசி தட்டுப்பாடுக்கு காரணம் என மத்திய அரசு மீது தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி: வரும் ஜூலை அல்லது ஆகஸ்டில் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. இந்தாண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு - ஆலோசனையை தொடங்கினார் பிரதமர்: சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனை தொடங்கியது. ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த நிலையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் முடிவு: சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்புக்குப் பிறகே தமிழகத்தில் +2 தேர்வுத் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியபிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதியோரின் உதவியாளர்களுக்கும் இ பதிவு: தமிழகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இ பதிவு நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்களும் பதிவு செய்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் - அறிக்கை தர உத்தரவு: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகோபாலனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.