தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி | தேனியிலும் ஓபிஎஸ் ஆதரவு பேனர்

விரைவுச் செய்திகள்: புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி | தேனியிலும் ஓபிஎஸ் ஆதரவு பேனர்

Sinekadhara

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 3 நாட்களில் 38 லட்சம் தடுப்பூசி: மாநில அரசுகள் வசம் ஒரு கோடியே 17 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 38 லட்சத்து 21 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.2.74 லட்சம் கோடி: கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசுக்கு வரி வருவாய் 2.74 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அதில் அனைவருக்கும் தடுப்பூசி, 25 கோடி ஏழைகளுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கியிருக்கலாம் என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளில் எய்ட்ஸுக்கு முடிவு கட்டுவோம்: அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை என ஐ.நா. சபையில் 75ஆவது கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியின் நீர்வழிப்பாதையில் முதல்வர் ஆய்வு: கல்லணையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள சூழலில், தஞ்சையில் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?: தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தேனியிலும் ஓபிஎஸ் ஆதரவு பேனர்: நெல்லையில் போஸ்டரைத் தொடர்ந்து தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம் என்ற வாசகத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய உத்தரவு: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் மரணம் என குறிப்பிடுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை கட்டணம் உயர்வு: ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்வதற்கான வங்கிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாயாக இருந்த பணம் எடுப்பதற்கான கட்டணம் 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் விற்பனை 66% சரிவு: மே மாதம் நாடெங்கும் வாகனங்கள் விற்பனை 66% சரிந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் காரணமாக பாதிப்பு என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோருக்கு தடுப்பூசி தேவையில்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என மத்திய அரசுக்கு தேசிய மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி துருக்கியை எதிர்கொள்கிறது.