டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை: ரேஷன் கடைகளுக்கான பாமாயில், பருப்பு வகைகள் கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும்: தமிழக அரசிடம் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவை இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தஞ்சை, திருவாரூரில் தடுப்பூசிகள் இல்லை: தஞ்சாவூர், திருவாரூரில் கொரோனா தடுப்பூசிகள் காலியானது. ஆர்வமுடன் செலுத்திக் கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
புதிய நாடாளுமன்றம் - தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு: புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு - 2 நாட்களில் முடிவு: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுகளை ரத்துசெய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
லட்சத்தீவு அதிகாரியை திரும்பப்பெறுக: லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருப்புப்பூஞ்சைக்கு புதுச்சேரியில் முதல் பலி: புதுச்சேரியில் கருப்புப் பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 62 வயது மூதாட்டிக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டதில் அவர் மரணமடைந்துள்ளார்.
தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது: கொரோனா காலக்கட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
சசிகலாவின் எண்ணம் ஈடேறாது - கே.பி.முனுசாமி: சசிகலாவின் எண்ணம் ஈடேறாது என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதியளித்துள்ளார். அமமுகவினருடனே சசிகலா தொலைபேசியில் பேசிவருவதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாலியல் புகார் - கராத்தே பயிற்சியாளர் கைது: தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பயிற்சியாளர் கெபிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல்: நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுர்வேத மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி: சீனாவில் 3 குழந்தைகள் வரை தம்பதிகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து முதியவர்கள் அதிகரித்த நிலையில் அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆந்திர டிவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை: ஆந்திராவில் ஆளும் கட்சியின் அதிருப்தி என்ற எம்பியின் பேட்டியை ஒளிபரப்பிய 2 டிவி சேனல்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.