தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: பேருந்து சேவைக்கு அனுமதி? | அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த்

விரைவுச் செய்திகள்: பேருந்து சேவைக்கு அனுமதி? | அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த்

Sinekadhara

பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்: இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக உருமாறி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்பாடம் ஆகிறது திருக்குறள்: சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் தனிப் பாடமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டு முதல் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் அறிவிப்புக்கு முதல்வர் கண்டனம்: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் பேட்டியளித்துள்ளார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், அணை கட்ட அனுமதி தரக் கூடாது என மத்திய அரசுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிக்காக இரவே வந்து காத்திருந்த மக்கள்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஈரோட்டில் தடுப்பூசிக்காக இரவே வந்து வரிசையில் மக்கள் இடம்பிடித்துக் காத்திருந்தனர்.

ஏடிஎம் கொள்ளையை தடுத்தவர் கொலை: திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளையை தடுக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து இளைஞர்கள் 4 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கல்வி டி.வி.யில் இன்று முதல் வகுப்புகள்: கல்வி தொலைக்காட்சியில் நடப்பாண்டுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது. அதற்கான புதிய பாடத்தொகுப்புகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைக்கிறார்.

ஆபாசமாக பேசியதை நடித்து காட்டிய 'பப்ஜி' மதன்: கைது செய்யப்பட்ட பப்ஜி மதனிடம் 2ஆவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆன்லைனில் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடுவதை நடித்துக் காட்டினார்.

சொகுசு அறைக்கு சீல்; சிஷ்யை சிறையில் அடைப்பு: பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிவசங்கர் பாபா பயன்படுத்திய பிரம்மாண்ட சொகுசு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக பரத நாட்டிய கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வு - விரைவில் முடிவு: தள்ளிவைக்கப்பட்டுள்ள நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சட்டமே பெரியது - எம்.பி.க்கள் குழு: இந்தியாவில் எங்கள் மண்ணின் சட்டம்தான் பெரியது என ட்விட்டர் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற எம்பிக்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்: மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 வாரத்திற்கு பிறகு சென்னை திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.

மில்கா சிங் மறைவு - தலைவர்கள் இரங்கல்: ‘தி ஃபிளையிங் சீக்’ என்றழைக்கப்படும் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.