குடும்ப அட்டைதாரர்களுக்கு 2ஆவது தவணையாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 13 வகையான மளிகைப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாகவும் ஆய்வு நடத்திவருகிறார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு - 2 நாட்களில் முடிவு: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுகளை ரத்துசெய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும்: தமிழக அரசிடம் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளதாகவும், அவை இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தஞ்சை, திருவாரூரில் தடுப்பூசிகள் இல்லை: தஞ்சாவூர், திருவாரூரில் கொரோனா தடுப்பூசிகள் காலியானது. ஆர்வமுடன் செலுத்திக் கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
மத்திய அரசின் பதிலை தமிழகம் எதிர்நோக்கியிருக்கிறது: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறோம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.
சசிகலாவின் எண்ணம் ஈடேறாது - கே.பி.முனுசாமி: சசிகலாவின் எண்ணம் ஈடேறாது என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அமமுகவினருடனே சசிகலா தொலைபேசியில் பேசிவருவதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கருப்புப்பூஞ்சைக்கு புதுச்சேரியில் முதல் பலி: புதுச்சேரியில் கருப்புப் பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 62 வயது மூதாட்டிக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டதில் மரணமடைந்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் - தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு: புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நடமாடும் வாகனங்களில் மளிகைப் பொருட்கள்: மேலும் ஒரு வார கால ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள் விற்பனை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு பொருட்கள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
12 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்களை தேடும் பணிகள் நடப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவு அதிகாரியை திரும்பப்பெறுக: லட்சத்தீவு அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது: கொரோனா காலக்கட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
4 ஆவது நாளாக 2 லட்சத்துக்கு கீழாக குறைந்தது: நாட்டில் 4 ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழாக குறைந்தது. நாடு முழுவதும் சிகிச்சைப்பெறுவோர் எண்ணிக்கையும் 20 லட்சமாக குறைந்தது.