தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: நீட் - தேதி அறிவிப்பு | மேகதாது பிரச்னை | தர்மசாலா வெள்ளப்பெருக்கு

விரைவுச் செய்திகள்: நீட் - தேதி அறிவிப்பு | மேகதாது பிரச்னை | தர்மசாலா வெள்ளப்பெருக்கு

Sinekadhara

செப்.12ல் நீட் நுழைவுத் தேர்வு:

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு எழுத நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு பெறும்வரை பயிற்சி தொடரும்:

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். நீட் தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கு விசாரணைக்குப்பின் தமிழக அரசின் தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு முழு உரிமை உள்ளது:

காவிரியில் தமிழ்நாட்டுக்கு முழு உரிமை உள்ளது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

மேகதாது - தமிழக அரசுக்கு கட்சிகள் ஆதரவு:

மேகதாது பிரச்னையில் தமிழக அரசின் முடிவுகளுக்கு ஆதரவு என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு ஒன்றிய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேகதாது - கர்நாடகாவுக்கு தமிழகம் பதிலடி:

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், சட்டப்படி தடுத்தே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை:

தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 20 மாவட்டங்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மருத்துவத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொங்குநாடு என கூறுவது விஷமத்தனமானது:

கொங்குநாடு என கூறுவது விஷமத்தனமானது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் கொங்குநாடு என கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கக் கோரிக்கை:

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. இந்நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்திருக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாட்டிற்குப் பின் பள்ளிகளை திறக்கலாம்:

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அறிவுறுத்தி இருக்கிறார்.

கேரளாவில் ஸிகா பாதிப்பு 19ஆக உயர்வு:

திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு ஸிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

பழனியை உலுக்கும் பாலியல் புகார்:

பழனி வந்த கேரள பெண்ணின் கணவரை விரட்டிவிட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் புகாரை வாங்குவதில் அலட்சியம் காட்டியது உறுதியானால் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை என திண்டுக்கல் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு:

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் கட்டடங்கள், கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.