தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: உள்ளாட்சி தேர்தல் | கோடநாடு வழக்கு | பாஞ்ச்ஷிர் மாகாணம் யார் வசம்?

விரைவுச் செய்திகள்: உள்ளாட்சி தேர்தல் | கோடநாடு வழக்கு | பாஞ்ச்ஷிர் மாகாணம் யார் வசம்?

Sinekadhara

விரைவில் ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல்: விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

4 ஊராட்சி தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி நாள்: பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பெரியார் அளித்த அடித்தளமே இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.

இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டமுன்வடிவு: தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் அமர்ந்துகொண்டே வேலைசெய்ய இருக்கை வசதியை வழங்கும் வகையிலான சட்ட முன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கு - 5 மணி நேரம் விசாரணை: கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தன்று பிடிபட்டவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி? என தனிப்படையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அரசு தரப்பு சாட்சிகளான ஷாஜி மற்றும் அனிஷிடம் தனிப்படையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

மின் உற்பத்தியை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை மேம்படுத்த மின்துறைக்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

5 நாட்களுக்கு மிதமான மழை: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

ஆப்கான் விவகாரம் - பிரதமர் உயர்மட்ட ஆலோசனை: ஆப்கானிஸ்தான் நிலவரத்தின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு மதிக்கவில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை என தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்பாதது குறித்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

செப். 12-ல் 10 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி: செப்டம்பர் 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கேரள எல்லையை ஒட்டியுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒரேநாளில் 10 லட்சம் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைஆசிரியர் வீட்டில் 8 மணிநேர சோதனை: அரசு வேலை பெற்று தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சேலத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எட்டு மணி நேரம் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்படும் கஞ்சா எங்கே?: தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா எங்கே என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். விவரங்களை வழக்கு எண்ணுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

பத்திரப்பதிவு முறைகேடு - சிறப்பு புலனாய்வு குழு: பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்றுள்ள தவறுகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என பேரவையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருக்கிறார்.

பாஞ்ச்ஷிர் மாகாணம் யார் வசம்?: ஆப்கானிஸ்தானில் பாஞ்ச்ஷிர் மாகாணமும் தங்கள் வசம் வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். சண்டை முடிவுக்கு வரவில்லை என எதிர்ப்பாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

4ஆவது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு - ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.