தமிழிசை சௌந்தரராஜன், விஜய் pt web
தமிழ்நாடு

பெரியாருக்கு விஜய் மரியாதை|“திராவிட சாயலை பூசிக் கொண்டார் விஜய்..தேசியத்தோடு வந்தாலாவது..” - தமிழிசை

பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செய்த நிலையில், விஜய் தனது கொள்கையை சொல்லியுள்ளார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

PT WEB

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு (இன்று), சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய்யின் திடீர் வருகையினால், அவரைக் காண ரசிகர்கள் பெரியார் திடலில் குவிந்தனர். அப்போது அவரிடம் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

vijay

மாநாட்டில் கட்சி தொடர்பான கொள்கை அறிவிக்கப்படும் என ஏற்கனவே, கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை சார்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “இதுவரை அவர் நேரடியாக எந்த சிலைகளுக்கும் மரியாதை செலுத்தியதில்லை. முதன்முறையாக மரியாதை செய்வது, பெரியார் சிலையாக இருக்கிறது. அவர் எந்த பாதையை தேர்வு செய்ய போகிறார் என நாம் யோசித்துக் கொண்டிருந்த சூழலில், தன்னுடைய பாதையை அவர் தெரிவித்துள்ளார். பெரியாரை புகழ்வதன் மூலமும், நேரடியாக சென்று அவரது சிலைக்கு மரியாதை செய்ததன் மூலமும், தனது பாதையை மக்களுக்கு சொல்கிறார்.

புதிதாக ஒருவர் கட்சி தொடங்கும்போது, இதுவரை இருக்கும் கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட சித்தாந்தம், கொள்கை போன்றவற்றுடன் இருக்க வேண்டும் என்பது என்னை போன்றவர்கள் மற்றும் சாதாரண மக்களது எதிர்பார்ப்பு.

ஒருவர் புதிதாக கட்சி தொடங்குகிறார். அவரது பார்வை மற்ற கட்சிகளின் சாயல் இல்லாமல், பரந்துபட்ட பார்வையாக இருந்தால் புதிய களத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் தனது கொள்கையை சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது ட்ரெய்லர் மாதிரி. ஏனெனில், அவர்கள் திரைப்படங்களில் நடித்தவர்கள். ட்ரைலரின் வருவதுதானே மெயின் பிக்சரில் வரும். மாநாட்டில் என்ன கொள்கையை சொல்லபோகிறார் என்பதை தற்போது சொல்லிவிட்டாரே. ட்ரைலர் வேற படம் வேறயாவா வரப்போகுது” என தெரிவித்தார்.