தமிழக வெற்றிக் கழகம் முகநூல்
தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக உறுப்பினராக இணைவது எப்படி? விஜய் வெளியிட்ட வீடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. முதல் உறுப்பினராக இணைந்த விஜய், தோழர்களாக ஒன்றிணைந்து சட்டப்பேரவை தேர்தலில் சரித்திரம் படைப்போம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PT WEB

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் கடந்த மாதம் அதிரடியாக அரசியலில் குதித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்த அவர், சினிமாவில் இருந்து விலகி முழுநேர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

மேலும், 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக செல்போன் செயலி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளார். செயலி மட்டுமன்றி வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமும் உடனடியாக கட்சியில் இணைய க்யூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 94440 05555 என்ற வாட்சப் எண்ணிற்கு TVK என குறுஞ்செய்தி அனுப்பியும் கட்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும். இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவரின் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

மேலும், மகளிர் தினத்தில் கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி என கூறியுள்ள அவர், தோழர்களாக இணைந்து எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்று தெரிவித்துள்ளார்.