2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாக்குகளை செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் நடிகர் விஜய் தனது வாக்கினை நீலாங்கரையில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தற்போது செலுத்தியுள்ளார். முன்னதாக தனது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக, ரஷ்யாவில் இருந்து தனி விமானத்தின் மூலமாக இன்று காலை சென்னை வந்தடைந்திருந்தார் விஜய்.
சென்னை வந்திருந்த அவர் பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காரில் புறப்பட்டு சென்று, தென் சென்னை மக்களவை தொகுதிக்கான தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக, விஜய் வாக்களிக்கும் வாக்குசாவடி மையத்தில் கூட்டநெரிசல் குறித்து விஜய்யின் அலுலகத்தின் சார்ப்பாக பார்வையிடப்பட்டது.
இதனையடுத்துதான் அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார். இருப்பினும், விஜய் வாக்களித்த நீலாங்கரை வாக்குச்சாவடியில் அவர் வந்தபோது அதிக கூட்டநெரிசல் ஏற்பட்டதால், பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த தேர்தலில் சைக்கிளில் வந்து விஜய் வாக்குகளை பதிவு செய்தநிலையில், அவரின் வாக்குப்பதிவு குறித்து இம்முறை எதிர்ப்பார்பு அதிகம் இருந்ததது. இந்நிலையில் இம்முறை காரில் வந்து வாக்கு செலுத்தினார்.
விஜய்யின் கையில் காயம் இருப்பதுபோல பேண்டேஜ் போட்டிருந்ததால், அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. கோட் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயமாக இருக்கலாமென சொல்லப்படுகிறது.
அதேநேரம் ரஷ்யாவிலிருந்து விஜய் வந்திருந்ததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.